கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாத சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது

      இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது

     தமிழ்நாட்டிலேயிருந்த பௌத்த, ஜைனர்கள் தத்தம் சமய நூல்களை எழுதுவதற்குப் பிராமி எழுத்திலிருந்து கிரந்த எழுத்து என்னும் புதுவகை எழுத்தை உண்டாக்கினார்கள். இந்தக் கிரந்த எழுத்தைக் கொண்டு அவர்கள் பாகத (பிராகிருத) நூல்களையும் சமஸ்கிருத நூல்களையும் எழுதிவந்தார்கள். பின்னர் நாளடைவில், சோழநாட்டில், கிரந்த எழுத்திலிருந்து ஒரு வகை தமிழ் எழுத்து உண்டாக்கப்பட்டு இப்போது வழங்கப்படுகிற தமிழ் எழுத்து வழங்கப்பட்டது. இந்தத் தமிழ் எழுத்துக்கும் கிரந்த எழுத்து என்பது பெயர். ஆனால், பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் பிராமி எழுத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பழைய வட்டெழுத்தே வழக்கத்தில் இருந்துவந்தது.

      பஞ்சபாண்டவர் குன்றில், இடைக்காலத்தில் செதுக்கியமைக்கப்பட்ட அருகக் கடவுளின் திருமேனிகளும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களும் காணப் படுகின்றன. மேலே இன்னோர் இடத்தில் இயற்கையாக அமைந்த குகையும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் இருக்கின்றன. இவை 1909 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கல்வெட் டெழுத்து 1911 ஆம் ஆண்டின் தொகுதியில் 561ஆம் எண்ணுள்ள தாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குகையையும் பிராமி எழுத்தையும் பற்றி 1912ஆம் ஆண்டு எபிகிராபி ஆண்டு அறிக்கையில் 57 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அறிக்கையிலேயே இந்தப் பிராமி எழுத்தின் நிழற்படம் வெளியிடப் பட்டிருக்கிறது. இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்து பதினொரு எழுத்துக்களைக் கொண்ட சிறு வாக்கியம்.